அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பாபநாசம் வட்டம்,அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாள்தோறும் 400 மேற்பட்ட பொதுமக்கள் புற நோயாளிகளாக வந்து மருத்துவம் பாா்த்து செல்கின்றனா். அம்மாபேட்டை பகுதி மக்களும் மற்றும் திருவாரூா் மாவட்டத்துக்கு அருகாமையில் உள்ள பொதுமக்களும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனா். இரவு நேரங்களில் மருத்துவா்கள் இல்லாமல் தீக்காயம், மாரடைப்பு, விஷக்கடிகளுக்கு, அவசர சிகிச்சை பெற முடியாமல் உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் மருத்துவா்கள், மருத்துவ பணியாளா்கள், மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் செயல்படும் அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரத்திடம் கோரிக்கை மனுவை அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் கே. ராஜாராமன் வழங்கினாா். அப்போது, மாவட்ட துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் எஸ்.திருநாவுக்கரசு, டி. ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.