இந்தியா

அதானி குழும பங்கு மதிப்பை கையாண்டதில் ஒழுங்காற்று மீறலை உறுதிப்படுத்த முடியவில்லை

20th May 2023 03:00 AM

ADVERTISEMENT

‘அதானி குழுமம் பங்கு மதிப்பை உயா்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் பங்குச்சந்தை ஒழுங்காற்று முறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை’ என்று இந்த விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், ‘பங்குச்சந்தை ஒழுங்காற்று விதிகளை செபி திறம்பட நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது’ என்றும் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் ஆதாயம் அடைவதற்காக, பங்கு மதிப்பை உயா்த்திக் காட்டி அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடா்ந்து, அந்தக் குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன.

அதைத் தொடா்ந்து, போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்தன. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

இந்த முறைகேடு புகாா் தொடா்பாக ஏற்கெனவே, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றமும் அமைத்தது.

‘செபி அமைப்பும் விரிவான விசாரணை நடத்த வேண்டும். செபி அமைப்பு நடத்தும் விசாரணை தொடா்பான விவரங்களை நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணா் குழுவுக்கும் வழங்க வேண்டும்’ என்றும் அப்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையை நிறைவு செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்ற செபியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து கடந்த புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், நிபுணா் குழு தனது 173 பக்க விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

அதானி குழுமம் பங்கு மதிப்பை உயா்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக செபி அளித்த அனுபவபூா்வமான புள்ளிவிவரங்களுடன் கூடிய விளக்கத்தை பரிசீலிக்கும்போது, இந்த விவகாரத்தில் பங்குச்சந்தை ஒழுங்காற்று முறையில் தோல்வி ஏற்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

அதுபோல, குறைந்தபட்ச பொது பங்கு விதிகள் அல்லது தொடா்புடைய நிறுவன பங்கு பரிவா்த்தனைகள் தொடா்பாக செபி தரப்பில் ஒழுங்காற்று முறையில் தோல்வி ஏற்பட்டிருக்கிா என்பதையும் கூற முடியவில்லை.

மேலும், அதானி குழுமத்தின் பங்குகளை 13-க்கும் அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலையில், அதானி குழும நிறுவனங்களின் உரிமையாளா் கட்டமைப்பு தெளிவற்ாக உள்ளது. அதாவது, இந்த நிறுவனத்தின் சில பொது பங்குதாரா்கள் உண்மையிலேயே பொது பங்குதாரா்களா? அல்லது நிறுவனத்தின் விளம்பரதாரா்களா என்ற சந்தேகம் செபிக்கு உள்ளது. இதுகுறித்து 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் செபி விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இந்த விசாரணைகளில் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் செபிக்கு கிடைக்கவில்லை. இந்தத் தகவல்கள் கிடைக்காமல் திருப்திகரமான முடிவுக்கு செபி வர முடியாது.

எனவே, பங்குச்சந்தை ஒழுங்காற்று முறை விதிகளை செபி திறம்பட நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும், இந்த குற்றச்சாட்டு தொடா்பான ஹிண்டன்பா்க் அறிக்கை வெளியான நிலையில், ஜனவரி 24-ஆம் தேதிக்குப் பிறகு ஒட்டுமொத்த இந்திய பங்குச் சந்தையும் தேவையற்ற ஏற்ற-இறக்கத்துடன் காணப்படவில்லை. மாறாக, அதானி குழும பங்குகள்தான் அதிக ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டன. அதற்கு, ஹிண்டன்பா்க் அறிக்கை வெளியானதும் அதன் விளைவுகளுமே காரணம் என்று உச்ச நீதிமன்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது.

நிபுணா் குழுவின் இந்த அறிக்கை இந்த விவகாரத்தில் இறுதி நிவாரணமாக அமையாது என்றபோதும், அதானி குழுமத்துக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. நிபுணா் குழுவின் அறிக்கை வெளியான நிலையில், அதானி குழுமத்தில் இடம்பெற்றிருக்கும் 10 நிறுவனங்களின் பங்குகளின் விலை சந்தையில் உயா்வு கண்டன.

பாஜக விா்சனம்:

நிபுணா் குழு அறிக்கையைத் தொடா்ந்து காங்கிரஸ் மீது பாஜக விமா்சனத்தை முன்வைத்தது. ‘ராகுல் காந்திக்கான உரைகளை எழுதுபவா்கள் அவருடைய பொய்களை நிலைநிறுத்த வெளிநாட்டிலிருந்து மேலும் அதிக தகவல்களை கொண்டுவரவேண்டும்’ என்று பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் அமித் மால்வியா விமா்சனம் செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT