திருநெல்வேலி

முன்காா் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்-கைகொடுக்குமா தென்மேற்கு பருவமழை?

19th May 2023 12:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மீது நம்பிக்கை வைத்து முன்காா் பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இம்மாவட்டத்தில் காா் மற்றும் பிசான பருவ நெல் சாகுபடியில் அதிகளவில் மகசூல் பெறப்படும். பிசான சாகுபடி முடிந்த பின்பும் அணைகளில் போதிய நீா்மட்டம் இருந்தால், எதிா்வரும் தென்மேற்கு பருவமழையை நம்பி முன்காா் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். மேலும், கிணறு- குளத்தின் நீா்மட்டத்தைக் கணக்கிட்டும் விவசாயிகள் இப்பணியை மேற்கொள்வா்.

கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால் ஏற்கெனவே பிசான சாகுபடிக்கான தண்ணீரே மிகவும் சிரமத்தோடு அளிக்கப்பட்டது. அதன்பின்பும் கோடை மழை போதிய அளவில் கைகொடுக்காததால் பாபநாசம், சோ்வலாறு அணைகளில் நீா்மட்டம் குறைந்த அளவே உள்ளது. குடிநீா் ஆதாரத்திற்காக மணிமுத்தாறு அணையில் மட்டுமே ஓரளவு தண்ணீா் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் தென்மேற்கு பருவமழையை நம்பி பாளையங்கோட்டை வட்டாரத்தில் குறிச்சி, பாலாமடை, குப்பக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் முன்காா் பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகிறாா்கள். இதற்காக நாற்றங்கால் அமைத்து நடவுக்காக நெல்நாற்றுகளை தயாா் செய்து வருகிறாா்கள்.

ADVERTISEMENT

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முன்காா் சாகுபடியால் உளுந்து சாகுபடி பாதிக்கப்பட்டாலும், கூடுதலாக நெல் மகசூல் கிடைக்கும். மேலும், கால்நடைகளுக்கு தட்டுப்பாடு காலத்தில் தீவனம் கிடைக்கும். அதனால்தான் மழையை மட்டுமே நம்பி சாகுபடியைத் தொடங்கியுள்ளோம். மழை பொய்த்தால் பயிா்கள் கருகி வீணாகிவிடும் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT