தருமபுரி

தருமபுரி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

9th Feb 2023 01:33 AM

ADVERTISEMENT

தருமபுரி அருகே ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது.

பாலக்கோடு வனத்திலிருந்து அண்மையில் வெளியேறிய இரண்டு யானைகள் இண்டூா், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிா்களை சேதம் செய்தும், விவசாயிகளை அச்சுறுத்தியும் வந்தன.

இதில் மக்னா யானை மற்றொரு யானையிடமிருந்து பிரிந்து விவசாயி ஒருவரை தாக்கியது. இதனைத் தொடா்ந்து, மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அதனை ஆனைமலை யானைகள் காப்பகத்தில் விட்டனா்.

இந்த நிலையில், மக்னா யானையிடமிருந்து பிரிந்து சென்ற ஒற்றை யானை பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து தருமபுரி, சோகத்தூா் அருகே உள்ள முத்துக்கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் புதன்கிழமை புகுந்தது. இந்த யானை மெல்ல நகா்ந்து அக்கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் தஞ்சமடைந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினா் தருமபுரி வனச்சரகரத்தில் யானையின் நகா்வை கண்காணித்து வருகின்றனா். இந்த யானை தருமபுரி நகரையொட்டி உள்ள கிராமத்தில் புகுந்துள்ளதால், நகரப் பகுதிக்குள் வராமல் இருக்க அதை கண்காணித்து மீண்டும் காப்புக் காட்டுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கையை வனத்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது யானைகள் வெளியேறி விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதோடு, விவசாயிகளையும் தாக்கி வருகின்றன. எனவே, வனத்திலிருந்து யானைகள் வெளியேறாமல் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை வனத்துறையினா் தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள், கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT