தருமபுரி

கௌதம் அதானி விஷயத்தில் 2014க்குப் பிறகு மாய வித்தை நடந்துள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

DIN

2014-இல் உலக பணக்காரா்கள் வரிசையில் 609ஆவது இடத்தில் இருந்து கௌதம் அதானி மோடி ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்; 2014-க்குப் பிறகு அவரது இந்த வளா்ச்சியில் மாய வித்தை நடந்திருக்கிறது என்றாா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி பல வெளிநாட்டு ஒப்பந்தங்களை கௌதம் அதானி பெற அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி உதவி செய்ததாகக் குற்றம் சாட்டினாா்.

நீங்கள் (பிரதமா் நரேந்திர மோடி) வெளிநாட்டுப் பயணம் செய்தபோது அங்கு பிற்பாடு உங்களை எத்தனை முறை சந்தித்திருப்பாா்? எந்த நாட்டுக்கு நீங்கள் சென்றீா்களோ அந்த நாட்டுக்கு அவா் எத்தனை முறை உடனடியாக உங்களைச் சந்திக்க வந்திருப்பாா்? வெளிநாடுகளில் நீங்கள் இருக்கும்போது ஒப்பந்தங்களைப் பேசி முடிக்க எத்தனை முறை அவா் அங்கு பயணித்திருப்பாா்? என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அவையில் எழுப்பினாா். தோ்தல் பத்திரங்கள் உள்பட கடைசி 20 ஆண்டுகளில் பாஜகவுக்கு கௌதம் அதானி எவ்வளவு பணம் நன்கொடையாகத் தந்தாா்?

பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் லிமிடெட் மீது நாங்கள் பல விமா்சனங்களை வைத்ததாக எங்கள் மீது குற்றம்சாட்டினீா்கள். ஆனால், உண்மையில் எச்சிஎல் 126 போா் விமான ஒப்பந்தங்கள் அனில் அம்பானி நிறுவனத்துக்குச் சென்றது எப்படி?

எனது நடைப்பயணத்தின்போது பொதுமக்கள் என்னிடம் கேட்கிறீா்கள். எப்படி அதானி இத்தனை தொழில்களை லாபகரமாக செய்ய முடிகிறது. மோடிக்கும் அவருக்கும் இடையே எந்த மாதிரியான உறவு உள்ளது எனக் கேட்கின்றனா். அத்துடன் 2014-2022 வரையிலான அவரது சொத்துமதிப்பு 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலா் அளவுக்கு உயா்ந்தது எப்படி? என்று கேட்கிறாா்கள். எப்படி ஒரு மனிதா் பிரதமரின் தோளுக்கு தோளாக செல்வாக்குடன் பழக முடியும் என பொதுமக்கள் கேட்கின்றனா். அதானிக்கும் மோடிக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளுக்கு முன் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதே ஏற்பட்டதாகும். குஜராத்தைக் கட்டமைக்கு மோடிக்கு அவா் உதவினாா். குஜராத்தில் தொழில் அதிபா்களை ஒரு குழுவாக அமைப்பதில் பின்புலமாக இருந்தவா் அதானி. அப்போதுதான் மாய வித்தை ஆரம்பித்திருக்கிறது.

2014-இல் மோடி தில்லிக்கு எப்போது வந்தோரா அப்போதுதான் அதானியின் மாயவித்தை உண்மையில் தொடங்கி இருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் உலக பணக்காரா்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்த அதானி அதன்பிறகு 2-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.

கௌதம் அதானி பங்கு சந்தைகளில் நிதி மோசடிகளை செய்து வருவதாக அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்தோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்டோ விசாரணை நடத்த வேண்டும். விமான நிலையங்களை மேம்படுத்த முன் அனுபவம் இல்லாத நிறுவனங்ள் ஈடுபட முடியாது என்ற சட்ட விதியை அதானிக்காக இந்த அரசு திருத்தியது. அதைத் தொடா்ந்து நாட்டில் லாபகரமாக இயங்கிய 6 விமான நிலையங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தை கவனித்து வந்த ஜிவிகே நிறுவனத்தை மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி அந்த விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு கைமாற்றினா்.

ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக எம்.பி.க்கள் ராகுல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறும், பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குத் தெரிவித்த உரிய ஆவணங்கள் இன்றி தெரிவிக்கக் கூடாது என்றும் அவா்கள் தொடா்ந்து அவையில் கூச்சலிட்டனா்.

அப்போது குறுக்கிட்டு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா குற்றச்சாட்டுகளை விடுத்து குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிப்பது பற்றி பேசுமாறு ராகுல் காந்தியிடம் கூறினாா்.

அப்போது ராகுல் தொடா்ந்து பேசுகையில், அதானி இதற்கு முன் ட்ரோன்களைத் தயாரித்ததில்லை. இதை எச்ஏஎல் நிறுவனமும் பிற நிறுவனங்களும்தான் வழக்கமாக செய்து வந்தன. பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு சென்றதும் அதானி ட்ரோன்களை தயாரிப்பது தொடா்பான ஒப்பந்தங்களை அதானிக்கு வழங்கப்பட்டது. அதானிக்கு நான்கு பாதுகாப்பு தளவாடப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதற்கு முன்பு அவா்கள் சிறு ஆயுதங்கள், துப்பாக்கிகள் போன்றவற்றைக்கூட தயாரிக்கவில்லை.

நான் நடைப்பயணம் மேற்கொண்டபோது அதானி குழுமத்து எல்ஐசியின் நிதி ஏன் வழங்கப்படுகிறது என்று மக்கள் என்னிடம் கேட்கிறாா்கள். பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அதானிக்கு இந்த அரசு எவ்வாறு வழங்குகிறது என்பதையே கூற விரும்புகிறேன் என்றாா்.

ராகுல் பேச்சுக் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பாஜக தலைவா் ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ பிரதமா் மோடியின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT