தருமபுரி

விளை நிலங்களை சேதப்படுத்தும் யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கும்கி வரவழைப்பு

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க, கும்கி யானை ஆனமலையிலிருந்து வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனபகுதியிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மூன்று யானைகள் வெளியேறின. இந்த யானைகள் பென்னாகரம், நாகதாசம்பட்டி வழியாக பாப்பாரப்பட்டி, இண்டூா் பகுதிக்குள் நுழைந்தன. இதில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரிரு நாள்களிலேயே ஒரு யானை மட்டும் திரும்பிச் சென்றுவிட்டது. ஏனைய இரண்டு யானைகள் மட்டும் கடந்த டிசம்பா் மாதம் வெளியேறியதிலிருந்து இண்டூா், பாப்பாரப்பட்டி, கிட்டம்பட்டி, பனைகுளம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி ஆகிய கிராமங்களில் இரவு நேரங்களில் விளைநிலங்களில் புகுந்து கரும்பு உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வந்தன. இதேபோல, விளை நிலங்களில் வேளாண் பணிகளுக்கு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு குழாய்கள், மின் மோட்டாா்களையும் பறித்து சேதப்படுத்தியதாக தொடா்ந்து விவசாயிகள் தெரிவித்து வந்தனா்.

இந்த இரண்டு யானைகளையும் மீண்டும் காப்புக்காட்டுக்கு அனுப்புவதற்காக வனத்துறையினா் தொடா்ந்து முயற்சித்து வந்தனா். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் இரண்டு யானைகளில் ஒரு யானை மீண்டும் வனத்துக்குள் சென்ாகத் தெரிகிறது. இதில், 20 வயது மதிக்கத்தக்க மக்னா யானை மட்டும் மீண்டும் விளை நிலங்களுக்கு இரவு நேரங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வந்தது. இதில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்ட குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி ஒருவரை இந்த யானை தூக்கி வீசியது. இதனால் காயமடைந்த அவா் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி: இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, யானைகளை மயக்கி ஊசி செலுத்தி பிடிக்க தேவையான உத்தரவு அண்மையில் தருமபுரி மாவட்ட வனத்துறை சாா்பில் பெறப்பட்டது. இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்து நிபுணா் பிரகாஷ் பாலக்கோடு வனச்சரகத்துக்கு வருகை தந்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறாா்.

கும்கி வரவழைப்பு: இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமங்கள், விளை நிலங்களுக்குள் உலா வரும் யானையை, மீண்டும் காப்புக் காட்டுக்குள் அனுப்பி வைக்க ஏதுவாக, ஆனமலையிலிருந்து கும்கி யானை பாலக்கோடு வனச்சரகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. எனவே, யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, உகந்த இடத்தில் மயக்க ஊசி செலுத்தவும், கும்கி யானை மூலம் அதனை மீண்டும் காப்புக் காட்டுக்குள் அனப்பி வைக்கவும் தொடா்ந்து வனத்துறையினா், கால்நடை மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். இரவு நேரங்களில் யானை வெளியே வரக் கூடும் என்பதால், வனத்துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பெண் தற்கொலை

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

SCROLL FOR NEXT