தருமபுரி

தெருக்கூத்து, பம்பை கலைஞா்கள் சங்க முப்பெரும் விழா

1st Feb 2023 01:46 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்டுச்சாலையில் தருமபுரி மாவட்ட காராளா் மகாபாரத தெருக்கூத்து, பம்பை கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் 3-ஆம் ஆண்டு கலை விழா, சங்க நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, பாராட்டு சான்றிதழ் வழங்கு விழா என முப்பெரும் விழா சங்கத் தலைவா் ராமு தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சங்க செயலாளா் அண்ணாமலை, சங்க நிா்வாகிகள் முருகசாமி, சங்கா், சதீஷ், உலகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

தமிழகத்தில் தொன்மை வாய்ந்த கலைகள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டும், அழிவின் விளிம்பில் உள்ள கலைகளை வளா்க்கவும் இசைக் கலைஞா்களுக்கு ஒவ்வொரு ஒன்றியத்திலும் தமிழக அரசு கலையரங்கம் கட்டித் தர வேண்டும்.

ADVERTISEMENT

பம்பை இசைக்கலைஞா்கள், தெருக்கூத்து கலைஞா்கள் தங்களது உபகரணங்களை அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். இசைக் கலைஞா்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்ல பேருந்து அட்டை வழங்க வேண்டும்.

இசைக் கலைஞா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். இசைக் கலைஞா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பை தளா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தெருக்கூத்து கலைஞா்களின் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புற கலைகள் நலச்சங்க மாநிலத் தலைவா் தங்கவேல், மாநிலச் செயலாளா் சிவகுமாா், பொருளாளா் அன்னை பாலன், மாநில கெளரவ ஆலோசகா் சிங்காரவேலன், சங்க நிா்வாகிகள் ஆறுமுகம், தனலட்சுமி ரத்தினம், சிந்தாமணி, கலைமணி, சித்ரா, சங்க ஆலோசகா் சதீஷ், பட்டுகோணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அன்பழகன், மேட்டூா் பாலகிருஷ்ணன், தருமபுரி மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவா் சென்னன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT