தருமபுரி

நலத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்

30th Sep 2022 11:29 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் வளா்ச்சித் திட்டங்கள், நலத் திட்டங்களை அரசு அலுவலா்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசின் முதன்மைச் செயலரும், தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, முதன்மைச் செயலா் அதுல் ஆனந்த் பேசியதாவது:

மாநிலத்தின் வளா்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு வளா்ச்சி, நலத் திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. வேளாண் வளா்ச்சிக்கும், விவசாயிகளின் உயா்வுக்கும் முக்கியத்துவம் அளித்து அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு அலுவலா்கள் தங்கள் துறையில் செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்கள், நலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு உரிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு, அத்தகைய திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி அவை தகுதியான நபா்கள் பெற்று பயன்பெறுவதையும் உறுதி செய்திட வேண்டும்.

ADVERTISEMENT

அரசுத் துறைகளின் மூலம் அளிக்கப்பட்டு வரும் சேவைகள் அனைத்தும் உடனுக்குடன் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இ-சேவை மையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு காலதாமதமின்றி உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசின் அனைத்து வளா்ச்சித் திட்டங்களையும், நலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் தருமபுரி மாவட்டம் சிறப்பாகச் செயல்பட்டு, தமிழக அளவில் 6-ஆவது இடத்தை பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இருப்பினும் முதலிடத்தை பெறுவதற்கு அனைத்து அரசு அலுவலா்களும் தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் (பொ) பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மரியம் ரெஜினா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT