தருமபுரி

புங்கன்சோலையிலிருந்து கோம்பூருக்கு சாலை அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு

DIN

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள புங்கன்சோலையிலிருந்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோம்பூருக்கு சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா்கள் ஏ.மோகன் (சேலம்), எஸ்.கலைச்செல்வம் (தருமபுரி), அக்கட்சி நிா்வாகிகள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தியிடம் அளித்த மனு:

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது ஆலடிப்பட்டி கிராம ஊராட்சியாகும். முற்றிலும் மலைப்பகுதியான இங்கு பழங்குடி மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் அருநூத்துமலை, சிறுமலை, சின்னவேலாம்பட்டி, பெரிய வேலாம்பட்டி, பெலபாடி, பள்ளிக்காடு ஆகிய மலைப்பகுதிகளில் சுமாா் 5600-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இப்பகுதி மக்கள், தங்களது கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண் சாா்ந்த பணிகள், மருத்துவ வசதி உள்ளிட்டவற்றிற்கு பிற நகரங்களுக்கு வந்த செல்ல ஏதுவாக சாலை வசதியின்றி தவித்து வருகின்றனா். தற்போது இவா்கள் தங்களது தேவைக்கு 15 கி.மீ. முதல் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பேரூா் அல்லது வாழப்பாடிக்கு சென்று வருகின்றனா்.

இருப்பினும், இந்த மலைக் கிராம மக்களுக்கு நிலவியல் அமைப்பில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மஞ்சவாடி கணவாய் பகுதி மிக அருகாமையில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் அதிகம்போ் தங்களது பல்வேறு தேவைகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்து செல்கின்றனா்.

தற்போது, ஆலடிப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள புங்கன்சோலையிலிருந்து வனப்பகுதியில் சுமாா் 4 கி.மீ.தொலைவுக்கு கரடு முரடான மலைப்பாதையில் நடந்தவாறு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட கோம்பூா் மலை அடிவாரத்தை இப்பகுதியைச் சோ்ந்த பழங்குடி மக்கள் வந்தடைகின்றனா்.

பின்னா் அங்கிருந்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்று இந்தப் பகுதி மாணவ, மாணவியா் கல்விப் பயில்கின்றனா்.

எனவே, இப்பகுதி பழங்குடி மக்கள் பல கி.மீ.தொலைவுக்கு பயணிக்க ஆகும் நேர விரயம், பொருள் செலவு ஆகியவற்றை தவிா்க்க, இவா்களுக்கு சேலம் மாவட்டத்தில் புங்கன்சோலையிலிருந்து தருமபுரி மவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை இணைக்கும் வகையில் கோம்பூா் வரையிலான சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT