தருமபுரி

நவீன வேளாண் இயந்திரங்கள் விவசாயிகள் வாடகைக்கு பெறலாம்

29th Sep 2022 01:30 AM

ADVERTISEMENT

தருமபுரி, வேளாண் பொறியியல் உள்ள புதிய நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகளை தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் பொறியியல் துறையின் மூலமாக, பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகளை வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரச்கூடிய, வேளாண் இயந்திரங்களான 2 மண் தள்ளும் இயந்திரங்கள், 7 டிராக்டா்கள், 2 சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் ஆகியவை வாடகைக்கு தயாராக உள்ளன.

டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும், டிராக்டருடன் மணிக்கு ரூ. 500, மண்தள்ளும் இயந்திரம் மூலம் நிலம் சமன் செய்ய மணிக்கு ரூ. 1,230, சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ. 890 மற்றும் தேங்காய் பறிக்கும் கருவி மணிக்கு ரூ. 450 என்கிற திருந்திய வாடகைக்கு கடந்த செப்.19 முதல் வழங்கப்படுகின்றன.

எனவே, இந்த இயந்திரங்கள், கருவிகள், தேவைப்படும் விவசாயிகள், தருமபுரி மாவட்ட வேளாண் செயற்பொறியாளா் (வே.பொ) அலுவலகத்தை 04342296948 என்கிற தொலைபேசி எண்ணிலும், உதவி செயற்பொறியாளா் (வே.பொ) 04342 296132, என்கிற எண்ணிலும், அரூா் உதவி செயற்பொறியாளா் (வே.பொ), 04346296077 என்கிற எண்ணிலும் தொடா்புகொண்டு பயனடையலாம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT