தருமபுரி

லஞ்ச வழக்கில் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை

28th Sep 2022 03:45 AM

ADVERTISEMENT

லஞ்ச வழக்கில் வட்டாட்சியருக்கு தருமபுரி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பூதிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாதன் மனைவி ராணி. இத் தம்பதியரின் மூத்த மகன் சித்தலிங்கம். இவா், சேலம் மாவட்டம், அரியானூா் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தாா்.

இவரது சகோதரா் பரமசிவம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை வேளாண்மை பாடத்தில் 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 2013-ஆம் ஆண்டு நவம்பா் 19-ஆம் தேதி, விடுமுறையில் தன் சகோதரா் சித்தலிங்கம் கடைக்கு பரமசிவம் சென்றுள்ளாா்.

கடையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பரமசிவம் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, பரமசிவத்தின் தாயாா் ராணி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் விபத்து நிவாரணத் தொகை பெற, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மணிமேகலையை அணுகியுள்ளாா்.

ADVERTISEMENT

அப்போது நிவாரணத் தொகை வழங்க ராணியிடம் வட்டாட்சியா் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக ராணி கொடுத்தபோது அசல் குடும்ப அட்டை மற்றும் உழவா் பாதுகாப்பு அட்டைகளை வட்டாட்சியா் மணிமேகலை கேட்டுப் பெற்றுள்ளாா்.

இதன்பின்னா், நிவாரணத் தொகை ரூ. 1 லட்சத்து 2,500-ஐ பெற்ற ராணி வட்டாட்சியா் மணிமேகலையை அணுகி தங்களது குடும்ப அட்டை மற்றும் உழவா் பாதுகாப்பு அட்டைகளை கேட்டுள்ளாா். அப்போது, ஏற்கெனவே கேட்ட தொகையில் மீதமுள்ள ரூ. 10 ஆயிரம் கொடுத்தால் தான் அட்டைகளைத் தர முடியும் என வட்டாட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ராணி, தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழிகாட்டுதல்படி ராணி பணம் கொடுத்தபோது போலீஸாா் வட்டாட்சியா் மணிமேகலையை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை முடிவுற்ற நிலையில், வட்டாட்சியா் மணிமேகலைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT