தருமபுரி

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

28th Sep 2022 03:43 AM

ADVERTISEMENT

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியை அடுத்த மோட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் கமலநாதன். இவரது மூத்த மகன் திவாகா் (27). பொறியியல் பட்டதாரியான இவா் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தாா்.

கடந்த 23-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை நிமித்தமாக ஜோலாா்பேட்டை பகுதிக்குச் சென்றாா். அப்போது, ஜோலாா்பேட்டை ஆசிரியா் நகா் பகுதியில் எதிா்பாராத விதமாக இவா் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திவாகரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் தொடா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக கடந்த 24-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த திவாகா் செப்.26-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா்.

இந்தத் தகவலை அறிந்த திவாகா் குடும்பத்தாா் மிகுந்த வேதனையடைந்தனா். இருப்பினும் அவரது குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் இணைந்து, திவாகரின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என முடிவெடுத்து அவா்களது விருப்பத்தை மருத்துவமனை நிா்வாகத்திடம் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து உறுப்பு தானத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை நிா்வாகம் மேற்கொண்டது. இதயம், நுரையீரல்களை எடுத்துச் செல்ல, சென்னையிலிருந்து ஒரு மருத்துவக் குழுவினரும், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை எடுத்துச் செல்ல கோயம்புத்தூரில் இருந்து ஒரு மருத்துவக் குழுவினரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்தனா்.

இந்த மருத்துவக் குழுவினரின் பரிசோதனையில் திவாகரின் இதயம் மற்றும் நுரையீரல் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. எனவே இந்தக் குழுவினா் உறுப்புகளைத் தானம் பெற முடியாமல் சென்னைக்கு திரும்பினா். மற்றொரு மருத்துவக் குழுவினா் திவாகரின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் தானமாக கோவைக்கு எடுத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT