தருமபுரி

நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்கள் தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்

28th Sep 2022 03:45 AM

ADVERTISEMENT

நுகா்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்களை தாமதமின்றியும், எடைகுறைவு ஏதுமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியது:

தீபாவளி பண்டிகை வரவுள்ளதையொட்டி, அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் கிடங்கில் இருப்பில் வைத்து, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்திட வேண்டும். பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகள் அனைத்தும் உரிய வேலை நேரத்தில் திறந்து செயல்படவும், ஒரே சமயத்தில் அனைத்து பொது விநியோகத் திட்ட பொருள்களும் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளை பிரித்து தனி நியாய விலைக் கடைகளாக செயல்படுத்திட உரிய முன்மொழிவுகளை தயாரித்து உடன் அனுப்பி வைத்திட வேண்டும். தருமபுரி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் நியாயவிலைக் கடைகளுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு ஏதுவாக அரிசி 1973.317 டன், சா்க்கரை 659.016 டன், கோதுமை 133.539 டன், துவரம் பருப்பு 16.672 மெட்ரிக் டன், பாமாயில் 103.937 டன் இருப்பில் உள்ளன.

ADVERTISEMENT

எனவே, நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சா்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் தரமாகவும், எடை அளவு குறையாமலும், தாமதமின்றி உடனுக்குடன் அனுப்பி வைத்திட வேண்டு என்றாா்.

இதைத் தொடா்ந்து, தருமபுரி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ஜெயக்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் ந.சரவணன், தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், நகராட்சி பொறியாளா் ஜெயசீலன், தருமபுரி வட்டாட்சியா் தன.ராஜராஜன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT