தருமபுரி

வேளாண், தோட்டக்கலைத் துறையில் ரூ.72.42 கோடி மதிப்பில் நல உதவிகள் 1.21 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கல்

25th Sep 2022 05:30 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.72.42 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் 1.21 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

வேளாண்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், வேளாண் நலத்திட்டங்கள் குறித்து ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் சனிக்கிழமை களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், நல்லம்பள்ளி அருகே வெத்தலைக்காரனம் பள்ளி பகுதியில் உள்ள நிலக்கடலை வயல், தேவா் ஊத்துப்பள்ளம் பகுதியில் சூரிய ஒளி ஆற்றல் மூலம் பம்ப்செட் அமைத்து சாகுபடி செய்துவரும் தீவனப்புல் சாகுபடி வயல், தொம்பரகாம்பட்டியில் நிழல் வலைக்கூடத்தில் நடைபெற்றுவரும் நாற்றுகள் உற்பத்தி, உங்காரனஅள்ளியில் நடைபெற்றும் வரும் விதைப்பண்ணை ஆகிய வயல்களில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கி.சாந்தி செய்தியாளா்களிடம் கூறியது:

விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும் வளா்ச்சிக்காகவும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் (2021-2022) 57 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த வேளாண் வளா்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.26.83 லட்சம் மானியத்தில் தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், விசைத் தெளிப்பான்கள், விதைகள், பயிறுவகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்பட்டு 12,151 விவசாயிகள் இதுவரை பயனடைந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் வேளாண், உழவா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மைத்துறையின் மூலம் இதுவரை 94,723 விவசாயிகளுக்கு ரூ.2613.55 லட்சம் (ரூ.26.14 கோடி) மதிப்பில் வேளாண் இடுப்பொருள்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் மூலம் இதுவரை 26,123 விவசாயிகளுக்கு ரூ.4419.06 லட்சம் (ரூ.44.19 கோடி) மதிப்பில் வேளாண் இடுபொருட்கள், பழக்கன்றுகள், பலன் தரும் மரக்கன்றுகள், சொட்டுநீா் பாசன வசதிகள், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் இதுவரை 98 விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்களுக்கு ரூ.209.14 லட்சம் (ரூ.2.09 கோடி) மதிப்பில் வேளாண் கருவிகள், வேளாண் வாடகை மையங்கள் மற்றும் மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1,20,944 விவசாயிகளுக்கு ரூ.72.42 கோடியில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இதில், தருமபுரி வேளாண் இணை இயக்குநா் (பொ) முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஜி.மாலினி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் இரா.மாது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) வி.குணசேகரன், அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT