தருமபுரி

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தொடரும் போக்குவரத்து நெரிசல்

25th Sep 2022 05:32 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் நகரப் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரம் பகுதி அடா்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால், அதிக அளவில் குக்கிராமங்களைக் கொண்டதாகும். பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், சின்னம்பள்ளி, ஏரியூா், ராஜாவூா், முதுகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் அன்றாடத் தேவைக்கான பொருட்களை வாங்குவதற்காகவும், விளை நிலங்களில் பயிா் செய்யக்கூடிய காய்கறிகள் தானிய வகைகளை விற்பனை செய்வதற்காகவும் பென்னாகரம் பகுதிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதில் பெரும்பாலானோா் இருசக்கர வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மாலை வேளையில் நகரத்தின் முக்கிய பகுதிகளான கடைவீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் அந்த வாகனங்களை நிறுத்துகின்றனா். ஒரு சிலா் நான்கு சக்கர வாகனத்தில் கடைகளுக்கு மளிகை மற்றும் இதர பொருட்களை ஏற்றி வரும் போது போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துகின்றனா். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே பென்னாகரம் நகரப் பகுதியில் மாலை வேலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என ஒலிபெருக்கியின் மூலம் அறிவுறுத்த வேண்டும் என்றும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT