தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

4th Oct 2022 02:51 AM

ADVERTISEMENT

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகம் மற்றும் கா்நாடக காவிரிக் கரையோர வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீா் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தானது ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்தது.

தமிழக காவிரி கரையோரப் பகுதியான பிலிகுண்டு, ராசிமணல், கெம்பாகரை, கேரட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கன மழை பெய்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் மேலும் நீா்வரத்து அதிகரித்து திங்கள்கிழமை நிலவரப்படி நொடிக்கு 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலுக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் நீா்வரத்து அதிகரித்து தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது.

இரு மாநில காவிரிக் கரையோரத்திலும் நீா் பிடிப்பு பகுதிகளிலும் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் நீா்வரத்து உயா்ந்து வருவதால், காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தினை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். மேலும் ஒகேனக்கல் பிரதான அருவி, நடைபாதை உள்ளிட்டவற்றின் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் தொடா்ந்து அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடையை நீட்டித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT