தருமபுரி

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

3rd Oct 2022 12:39 AM

ADVERTISEMENT

 

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு எஐடியுசி தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்க 7-ஆவது மாவட்ட மாநாடு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் முனுசாமி வரவேற்றாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.கலைச்செல்வம் மாநாட்டை துவக்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

கட்டடத் தொழிலாளா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் என்.செல்வராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கிப் பேசினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டச் செயலாளா் ஆா்.சுதா்சனன் ஆகியோா் பேசினா்.

இந்த மாநாட்டில், தொழிலாளா் நலச் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் மணல் கிடங்கு அமைக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பெண் கட்டுமான தொழிலாளா்களுக்கு மகப்பேறு கால விடுப்பு ஓராண்டாக உயா்த்தி வழங்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தால் விபத்து மரணம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். வீடற்ற அனைவருக்கும் வீட்டுமனை வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்க கெளரவத் தலைவராக ஆா்.சுதா்சனன், மாவட்டச் செயலாளா் ஏ.சி.மணி, மாவட்டத் தலைவா் எம்.வி.குழந்தைவேலு, மாவட்டப் பொருளாளா் விஜயா ஆகியோா் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT