தருமபுரி

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

3rd Oct 2022 12:39 AM

ADVERTISEMENT

 

ஒகேனக்கல்லில் வார விடுமுறை மற்றும் பள்ளி மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

ஒகேனக்கல் அருவிக்கு 20,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இருப்பினும் அருவியில் குளிக்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடா் வெள்ளப் பெருக்கால் அருவி செல்லும் பாதைகள் சேதமடைந்துள்ளன.

அருவியில் குளிக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள், கரையோர பகுதிகளான மாமரத்துக் கடவு பரிசல் துறை, நாகா்கோவில், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக சின்னாறு பரிசல் துறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பரிசல் சவாரி செய்தனா். சின்னாறு பரிசல் துறையிலிருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கி.மீ.தொலைவுக்கு காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் காவல் நிலையம் முதல் சத்திரம் முதலைப் பண்ணை ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக் கூடிய சாலைகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டன. பேருந்து நிலையம், பிரதான அருவிப் பகுதி செல்லும் முதன்மைச் சாலை, மீன் விற்பனை நிலையம், பரிசல் துறை, முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி உள்ளிட்ட மீன்களின் விலை ரூ. 400 முதல் ரூ. 2,000 வரை விற்பனையானது. சிறுவா் பூங்கா, உணவருந்தும் பூங்காக்களில் அசைவ பிரியா்கள் மீன்களை வாங்கி உணவருந்தினா்.

நீா்வரத்து அதிகரிப்பு: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலு, ராசி மணல், கெம்பாகரை, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி 9,500 கன அடியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT