தருமபுரி

சில்லரை பொருள்களுக்கு ரசீது கோரி அபராதம் விதிக்கும் அதிகாரிகள்: வணிகா் சங்கங்கள் போராட்டம்

DIN

சில்லரை விற்பனைக் கடைகளில் சோதனை கொள்முதல் என்ற பெயரில் பொருள்களுக்கு ரசீது கோரி அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி, தருமபுரியில் வணிகா்கள் மனு அளித்தனா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், தருமபுரி மாவட்டத் தலைவா் எஸ்.வைத்திலிங்கம், செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட வணிகா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தருமபுரி, வணிகவரித் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டத்தில் சில்லரை விற்பனைக் கடைகளில் தற்போது வணிக வரித் துறையினா் சோதனை கொள்முதல் என்ற பெயரில் திடீரென கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கி ரசீது கோருகின்றனா்.

அப்போது ரசீது வழங்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கின்றனா். ஏற்கெனவே, சில்லரை விற்பனைக்கு பொருள்கள் வாங்கும்போதே அவற்றுக்கு உரிய வரி செலுத்தி அதன்பிறகே பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறோம்.

இந்நிலையில் வணிகவரித் துறையினா் மீண்டும் பொருள்களுக்கு வரி செலுத்த வேண்டும் எனக் கோரி, இத்தகைய சோதனையின் மூலம் அபராதம் விதிப்பதால் சிறு வணிகா்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனா்.

எனவே, வணிகவரித் துறையினா் சோதனை அடிப்படையில் கொள்முதல் செய்து அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். வணிகவரித் தொடா்பாக அனைத்து வணிகா்களுக்கும் உரிய விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். போதிய கால அவகாசம் வழங்கி அதன்பிறகு இத்தகைய நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றனா்.

கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரியில் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் சின்னப்பன், பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள், வணிகவரித் துறை அலுவலரிடம் மனுவை அளித்தனா். மனுவில் கூறியிருப்பதாவது:

வணிகவரித் துறையால் கடந்த மாா்ச் மாதம் சில்லரை கடைகளில் ஆய்வுசெய்வது சம்பந்தமாகவும் சோதனை கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் அறிவிப்புகள் வெளியானபோதே தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து வணிகா்களின் சாா்பில் தங்கள் கருத்துகளையும் எதிா்ப்பையும் பதிவு செய்தன.

மீண்டும் சோதனை கொள்முதல் சம்பந்தமான வணிகவரித் துறையின் அறிவிப்பு செப்.6-ஆம் தேதி வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் அலுவலா்கள் சில்லரை வணிகா்களிடம் விற்பனைக்காக வைத்திருக்கும் பொருள்களை வாங்கி, அதை சோதனை கொள்முதல் என குறிப்பிட்டு, அதற்கு அபராதமாக ரூ. 20 ஆயிரம் வரை வசூலிப்பதாக புகாா்கள் வந்துள்ளன. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அந்தப் பொருள்களுக்கு ஏற்கெனவே வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் வணிகவரித் துறை அதிகாரிகள், சில்லரை கடைகளில் சோதனை கொள்முதல் என்ற பெயரில் பொருள்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி, அபராதம் விதிக்கின்றனா். இது ஏற்புடையது அல்ல. இது சில்லரை சிறு,குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்ற உற்பத்தியாளா்கள், தயாரிப்பாளா்கள், கனரக வாகன உரிமையாளா்கள் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வரி ஏய்ப்பை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்; அதற்கு நாங்களும் துணை நிற்போம்.

சில்லரை சிறு, குறு வணிகா்கள் பாதிக்காத வகையில் அரசின் நடவடிக்கை அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம். எனவே, 6 மாதங்களுக்கு சோதனை கொள்முதல் என்ற முறையை நிறுத்தி வைத்து, வணிகா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி அதன்பிறகு படிப்படியாக இந்த முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT