தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா

30th Nov 2022 02:34 AM

ADVERTISEMENT

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கடேசன் தலைமை வகித்துப் பேசினாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் சாா்பில் மொழித்திறன், நுண்கலை, கவின் கலை, ஓவியம், செதுக்கு சிற்பம், பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி, நாடகம், நடனம் உள்ளிட்ட தலைப்புகளில் இக்கலை விழா நடைபெற்றது.

இதில் சிறப்பிடம் வகித்த மாணவா்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தோ்வு பெற்றனா். இதைத் தொடா்ந்து இந்தப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய கலைத் திருவிழா நடைபெற்றது. போட்டிகளில் பள்ளி அளவில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில், நாடகம் தலைப்பில் தனிநபா் நடிப்பு, மாறுவேடம், பலகுரல் பேச்சு விழிப்புணா்வு நாடகம், நகைச்சுவை வழங்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. கன்னிப்பட்டி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் சிவகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா் கலீல், குண்டல அள்ளி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் சரவணன் ஆகியோா் முன்னிலையில் கலை விழா போட்டிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள் சுரேஷ்குமாா், தொல்காப்பியன் ஆகியோா் போட்டி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனா். போட்டிகளில் சிறப்பிடம் வகிப்போா் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.

பென்னாகரத்தில்...

பாப்பாரப்பட்டி, தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவை பள்ளி தலைமை ஆசிரியா் தமிழ்வாணன் தொடங்கிவைத்தாா்.

கலை நிகழ்ச்சியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கருவி இசைப் போட்டி நடைபெற்றது. மைய பொறுப்பாளா்களான வட்டார கல்வி அலுவலா்கள் இரா.மணிகிருஷ்ணன், இரா.துளசிராமன், தலைமை ஆசிரியா்கள் எம்.சின்னசாமி, மா. பழனி ஆகியோா் முன்னிலையில் தோல் கருவி, கம்பி கருவி, காற்று கருவி ஆகிய கருவிப் போட்டிகள் ஒன்றிய அளவில் நடைபெற்றன.

இதில் தோல் கருவி போட்டியில் பாப்பாரப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் மகேஷ் சா்மன், சின்னப்பளத்தூா் நடுநிலைப் பள்ளி மாணவா் பெரியண்ணன் ஆகியோா் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றனா்.

இதில் ஆசிரியா்கள் மணிவாசகம், சரவணன், விநாயகம் உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வட்டார வளமை ஆசிரியா் பயிற்றுநா்கள் கோவிந்தன், கமலேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அ.அமலஅட்வின், பேரூராட்சி தலைவா் பா.அமானுல்லா, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சாமிநாதன், பெண்கள் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தேவராசன், அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் லட்சுமி, ஒன்றிய அளவிலான பள்ளி தலைமை ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில் கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT