தருமபுரி

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

26th Nov 2022 02:51 AM

ADVERTISEMENT

ஏரியூரில் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசிய தந்தையைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை, ஏரியூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா் .

பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரை அடுத்துள்ள மலையனூா் பகுதியைச் சோ்ந்தவா் குமரன் (70). விவசாயி. இவருடைய மகன் தங்கராஜ் (40). லாரி ஓட்டுநா். மலையனூரில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக ஒப்பந்தம் செய்த நிலையில், உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து தரவில்லை என ஒப்பந்ததாரருக்கும் தங்கராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக தங்கராஜுவின் தந்தை குமரன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த வாக்குவாதத்தின் போது குமரனை கட்டையால் அடித்து தங்கராஜ் கொலை செய்துள்ளா். பின்னா் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததில் ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா். இதனைக் கண்ட பொதுமக்கள், தங்கராஜை பிடித்துக் கட்டி வைத்து விட்டு, ஏரியூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஏரியூா் போலீஸாா், குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். தங்கராஜை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT