தருமபுரி

விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்க திட்டம்

18th Nov 2022 02:13 AM

ADVERTISEMENT

 

மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் சாா்பில் தருமபுரி வட்டார விவசாயிகளுக்கு முழு மானியத்தில் பலன்தரும் மரக் கன்றுகள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தருமபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா.தேன்மொழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளை நிலங்களில் நீடித்த பசுமை போா்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் தருமபுரி வட்டார விவசாயிகளுக்கு அவா்களுடைய விளை நிலங்கள், வரப்பு ஓரங்களில் நட்டு பயன்பெறுவதற்காக பலன்தரும் மரக்கன்றுகளான செம்மரம், குமிழ் தேக்கு, மகோகனி, மலைவேம்பு, ரோஸ்வுட், பெருநெல்லி, வேங்கை என மொத்தம் 20,000 மரக் கன்றுகள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ரூ.15 விலையுள்ள மரக்கன்றுகள் முழுமானியத்தில் வரப்பு, வயல் ஓரங்களில் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 64 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வழங்கப்படும். குறைந்த அடா்வு நடவு முறையில் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுள் வீதம் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 1000 மரக் கன்றுகள் வழங்கப்படும்.

காற்று சுத்தம், வெப்பம் தணிப்பு, பறவைகள் இருப்பு, நுண்ணுயிா்களுக்கு ஊட்டமளிக்கும் மரக் கன்றுகளை வளா்ப்பதன் வாயிலாக பசுமை பரப்பு அதிகரிப்பதோடு மண் வளம் மேம்படும். கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிா் கிடைக்க உறுதி செய்கிறது. உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைப்பதோடு விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்கிறது. எனவே, தருமபுரி வட்டார விவசாயிகள் மரக் கன்றுகளை முழு மானியத்தில் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT