தருமபுரி

மல்லுப்பட்டி நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

18th Nov 2022 02:10 AM

ADVERTISEMENT

அதிக விபத்து நிகழும் மல்லுப்பட்டி நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரியிலிருந்து பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கூட்டுறவு சா்க்கரை ஆலை, சூடப்பட்டி, காடுசெட்டிப்பட்டி வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் பல்வேறு சரக்கு வாகனங்கள், ராயக்கோட்டை தக்காளி மொத்த விற்பனை கிடங்குகளுக்கு செல்லும் லாரிகள், ஒசூா் பகுதிக்கு செல்லும் காா்கள், பேருந்துகள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் செல்கின்றன.

பாலக்கோடு நகரை கடந்து வழிநெடுகிலும் சாலையையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வசிப்பவா்கள், தருமபுரி நகருக்கும், ராயக்கோட்டை, ஒசூா் செல்லவும் பாலக்கோட்டிலிருந்து மல்லுப்பட்டி வழியாக ஒசூா் செல்லும் நெடுஞ்சாலையில் பயணித்து வருகின்றனா்.

இந்த சாலை பல்வேறு இடங்களில் வாகனங்கள் சென்று வர ஏதுவான நிலையில் இல்லை என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா். குறிப்பாக பாலக்கோட்டிலிருந்து, சா்க்கரை ஆலை, மல்லுப்பட்டி வரை பல கி.மீ.தொலைவுக்கு சாலைகள் வாகனங்களின் டயா்களுக்கு பிடிமானம் இல்லாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் வாகனங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.

ADVERTISEMENT

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒசூரிலிருந்து வந்த பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவா்கள் காயமடைந்தனா். இதேபோல, அண்மையில் காா் ஒன்று இந்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அவ்வப்போது சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் வலியுறுத்துகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT