தருமபுரியிலிருந்து ஒசூா் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் அணுகுச் சாலைகள் அமைக்க வேண்டும் என கோரி, ஜக்கசமுத்திரம் கிராம மக்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஜக்கசமுத்திரம் கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
எங்களது கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. எங்களது கிராமத்துக்கு அருகில் குக்கிராமங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வரும் இப்பகுதி மக்கள், தங்களது விளைபொருள்களை ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்கின்றனா்.
இந்த நிலையில், தற்போது, தருமபுரியிலிருந்து பாலக்கோடு வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலை எங்களது கிராமம் வழியாக கடந்து செல்கிறது. எனவே, இச்சாலையில் எங்களது கிராமத்துக்கு அருகில் உள்ள பொம்மனூா் மேம்பாலத்தின் இருபுறமும் அணுகுச் சாலைகள் அமைக்கப்பட்டால், அதன் வழியாக நாங்கள் எளிதில், ஒசூா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்றுவர ஏதுவாக அமையும். எனவே, புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலையில், அணுகுச் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.