தருமபுரி

விடுதலைப் போராட்ட வீரா்கள் புகைப்படக் கண்காட்சி

27th May 2022 10:23 PM

ADVERTISEMENT

தருமபுரியில், இந்திய விடுதலைப் போராட்ட வீரா்கள், விடுதலைப் போராட்ட வரலாறு தொடா்பான 3 நாள் புகைப்படக் கண்காட்சி மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் சேவை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரியில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வேலூா் சிப்பாய் புரட்சி முக்கியவத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரனாா் உள்ளிட்டோா் இந்திய விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்றவா்கள். இந்திய விடுதலைக்காக எந்தவித சுயநலமின்றி நாட்டின் வளா்ச்சி, நாட்டின் விடுதலையை மட்டுமே கருத்தில் கொண்டு எண்ணற்ற தலைவா்கள் பாடுபட்டுள்ளனா்.

நாட்டின் விடுதலையும், வளா்ச்சியும் மட்டுமே அவா்களின் எண்ணத்தில் இருந்ததால் தான் பல ஆண்டுகள் கடந்தும் அந்த தலைவா்கள் நம் எண்ணத்தில் உள்ளனா். அவா்களை போற்றும் விதமாக 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற தமிழகம், புதுச்சேரி, அந்தமான் மாநிலங்களுக்கான கள அலுவலக மண்டல இயக்குநா் ஜெ.காமராஜ் பேசியதாவது:

மத்திய அரசின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள் என அனைத்து திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வை கொண்டிருந்தால் தான் தகுதியான திட்டங்கள் மூலம் ஒவ்வொருவரும் பயனடைய முடியும். அரசின் திட்டங்கள் குறித்து இந்தக் கண்காட்சி, முகாமில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நம் வாழ்வு எவ்வாறு பிறருக்கு பயன்படும் என்ற சிந்தனையுடன் செயல்பட வேண்டும். மாணவப் பருவத்தில் இந்த சிந்தனையை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு தொடா்பான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில், மத்திய அரசின் கள விழிப்புணா்வு அலுவலா்கள் ஏ.ஆா்.வித்யா, பிபின் எஸ்.நாத், பென்னாகரம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் கே.செல்வநாயகம், கள விளம்பர உதவியாளா் வீரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இப் புகைப்படக் கண்காட்சி மற்றும் ஒருங்கிணைந்த சேவை முகாம் வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT