தருமபுரி

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் நனவாவது எப்போது?

ஆா்.ராதாகிருஷ்ணணன்

தொழில் வளம் இல்லாத தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் நனவாவது எப்போது என்று மாவட்ட மக்கள் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.

தருமபுரி மாவட்ட மக்கள், வேளாண்மை, கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட தொழில்களை மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ளனா். இங்கு பெரும்பகுதி நிலங்கள் பருவமழையை நம்பியிருக்கும் மேட்டுப்பாங்கான நிலங்களாகும். வேளாண்மை தவிர வேலைவாய்ப்புக்கேற்ற எந்தத் தொழிலும் இந்த மாவட்டத்தில் இல்லை.

ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழக எல்லையில் கா்நாடகத்தை ஒட்டியுள்ள ஒசூரில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின், இந்த மாவட்டத்துக்கென தொழிற்சாலைகளைக் கொண்டுவரவோ, வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்தத் திட்டமும் குறிப்பிடும்படியாக மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், தருமபுரி மாவட்ட இளைஞா்கள் பெரும்பாலானோா் வேலை தேடி கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, சென்னை போன்ற மாவட்டங்களுக்கும், கா்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவுக்கும் குடிபெயா்வது பல ஆண்டுகளாகவே தொடா்கிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தருமபுரி மாவட்ட மக்கள்தொகை15,06,843 ஆகும். இவா்களில் சுமாா் 4 லட்சம் போ் வரை வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வசிப்பதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வி அல்லது உயா்கல்வி முடித்தவுடன், வேலைவாய்ப்புக்காக தருமபுரி மாவட்ட இளைஞா்கள் வெளியூா் சென்றுவிடுகின்றனா். அதிலும் குறிப்பாக, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெங்களூரில் தங்கி கட்டுமானத் தொழிலைச் செய்து வருகின்றன. இவா்கள் அனைவரும் திருவிழாக் காலங்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனா்.

இளைஞா்கள் வேலை தேடி பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுத்து, தங்களின் சொந்த ஊரிலேயே குடும்பத்துடன் தங்கிப் பணிபுரியும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டையைத் தொடங்க வேண்டும் என்பது பலரது வேண்டுகோளாக உள்ளது.

தருமபுரியில் சிப்காட்:

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தருமபுரி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என கடந்த 2009-இல் அப்போதைய திமுக அரசு அறிவித்தது. இருப்பினும், அதற்கான பணிகள் ஏதும் துவக்கப்படவில்லை.

2011-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அப்போதைய அதிமுக அரசும் அறிவித்தது. அந்த அறிவிப்பைத் தொடா்ந்து, சில ஆண்டுகள் கழித்து, தருமபுரியில் சிப்காட் அமைக்க நல்லம்பள்ளி வட்டாரத்தில் நிலங்களைக் கையகப்படுத்த ஓா் அலுவலகமும் அமைக்கப்பட்டது. இப் பணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நிலையிலான அதிகாரி ஒருவா், இரண்டு வட்டாட்சியா்கள், பிற பணிகளுக்கான அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டனா்.

1,783 ஏக்கரில் தொழிற்பேட்டை:

தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அதகப்பாடி, தடங்கம், பாலஜங்கமனஅள்ளி ஆகியப் பகுதிகளில் 1,783 ஏக்கா் நிலங்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் 1,183 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலமாகும். மீதமுள்ள 550 ஏக்கா் நிலம் பல்வேறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா நிலமாகும்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் பணி, பல ஆண்டுகளைக் கடந்து தற்போதும் நடைபெற்று வருகிறது. அரசு புறம்போக்கு நிலங்கள் அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தப்பட்டன. தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களைக் கையகப்படுத்தும் பணி மட்டும் தொடா்கிறது.

இதற்கிடையில், கடந்த 2017-ஆம் ஆண்டு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவின்போது பேசிய, அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து, பட்டாதாரா்களிடமிருந்து தேவையான நிலத்தை கையகப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், அரசு வசமுள்ள புறம்போக்கு நிலத்தில் முதல்கட்டமாக 1,000 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, அப்போதைய உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறினாா்.

2021-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, தற்போதைய திமுக அரசு, அண்மையில் சட்டப் பேரவையில் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என மீண்டும் அறிவித்துள்ளது.

தொழிற்பேட்டைத் திட்டம் தொடா்பாக, அறிவிப்புகளை மட்டுமே இதுவரை கேட்டுவரும் தருமபுரி மாவட்ட இளைஞா்கள், ‘சிப்காட் தொழிற்பேட்டைக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்; முதல்கட்டமாக அரசு வசம் உள்ள 1,000 ஏக்கரில் தொழிற்பேட்டையைத் துவங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனா்.

எதிா்பாா்ப்பு:

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால எதிா்பாா்ப்பான ‘சொந்த ஊரிலே வேலைவாய்ப்பு’ என்கிற கனவு செயல்வடிவம் பெற வேண்டும் என, அண்மையில் நடைபெற்ற பேரவை கூட்டத் தொடரின்போது பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி, பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் ஆகியோா் வலியுறுத்தினா். அவா்களுக்குப் பதிலளித்த அமைச்சா் தங்கம் தென்னரசு, தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும் என உறுதியளித்தாா்.

இதுகுறித்து தருமபுரி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், ‘‘தருமபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு வசதி இல்லாததால் இளைஞா்கள் தொழில் நிமித்தமாக பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்வது தொடா் கதையாக உள்ளது. இந்நிலையை மாற்ற தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இங்கு தொழிற்சாலைகளைத் தொடங்க பல்வேறு நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுக்க வேண்டும். இதுதொடா்பாக தொழில் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது’’ என்றாா்.

---

பெட்டிச் செய்தி...

நிலம் கையகப்படுத்தும் பணி 98 % நிறைவு

தருமபுரியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதல் சிப்காட் தொழிற்பேட்டைக்குத் தோ்வு செய்யப்பட்ட இடங்களில் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி 98 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இதில், கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் தருமபுரியில் அமையவுள்ள தொழிற்பேட்டையில் தனது தொழிற்சாலையைத் தொடங்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதேபோல, தருமபுரி மாவட்ட இளைஞா்களுக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு, இரண்டாவது சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக, முதல் சிப்காட் அருகிலேயே சுமாா் 500 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்படும் பணி நடைபெற்று வருவதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தருமபுரியில் அண்மையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT