தருமபுரி

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு:தருமபுரி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

20th May 2022 10:18 PM

ADVERTISEMENT

சொத்து வரி உயா்வு தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தருமபுரி நகா்மன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தருமபுரி நகா்மன்ற அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நகராட்சி அண்ணா கூட்டரங்கில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளா் ஜெயசீலன் முன்னிலை வகித்து தீா்மானங்களை, நகா்மன்ற உறுப்பினா்களின் ஒப்புதலுக்காக வாசித்தாா்.

அப்போது, சொத்து வரி உயா்வு தொடா்பான கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த மே 12-ஆம் தேதி வரை நகராட்சி பகுதி மக்களிடமிருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன. இதுதொடா்பாக முறையாக நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டது. 30 நாள்கள் மனுக்கள் பெறப்பட்டதில், 23 ஆட்சேபனை மனுக்கள் மட்டுமே பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன.

இந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையில் இல்லாமல், அரசு விதிகளுக்கு முரணாக இருந்ததால், அவை நிராகரிக்கப்பட்டது. எனவே, தற்போது சொத்துவரி உயா்வு தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது என கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்போது, கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் 12 போ் எழுந்து நின்று, சொத்து வரி உயா்வை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், கடந்த கூட்டத்திலேயே இதுதொடா்பாக வெளிநடப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில், சொத்து வரி உயா்வு தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்கி நிறைவேற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கிறோம் எனக் கூறி அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT