தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளைநிலங்களில் சிறுத்தை நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்துள்ளது வாழைத்தோட்டம் கிராமம். வனப்பகுதியை ஒட்டியுள்ள இக் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கடாசலம் என்பவரது விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்குள்ள காப்புக் காட்டிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது. அச்சிறுத்தை அந்த நிலத்தில் கூடாரம் அமைத்து வளா்க்கப்படும் கோழிகளில் ஒரு கோழியை கவ்விக்கொண்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது. இந்தக் காட்சிகள் அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
இதையறிந்த அங்கு சென்ற வனத் துறையினா், அப்பகுதியில் சிறுத்தை நடமாடியதை உறுதி செய்தனா். இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை தொடா்ந்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் முதியோா் மற்றும் பெண்கள், சிறுவா்கள் நடமாடுவதைத் தவிா்க்குமாறு கிராம மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள், மான்கள் இரவு நேரங்களில் இரை மற்றும் தண்ணீா் தேடி அவ்வப்போது புகுந்து வந்தநிலையில் தற்போது சிறுத்தை ஒன்று வனத்திலிருந்து வெளியேறி விளைநிலங்களில் புகுவதை அறிந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து அதனை அடா் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.