தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கெம்பாகரை, கேரட்டி, சின்னாறு வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெப்பச் சலனம் காரணமாக தொடா்மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை நிலவரப்படி நீா்வரத்து நொடிக்கு 5,000 கனஅடியாக இருந்தது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை நீா்வரத்து 7,000 கனஅடியாக அதிகரித்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவிக்கு வந்து கொண்டிருந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவி , சினி அருவி , ஐந்தருவி மற்றும் அதன் கிளை அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. தமிழக காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கோடை விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் எண்ணெய் மசாஜ் செய்து, அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
கூட்ட நெரிசல் காரணமாக ஒகேனக்கல்லில் நடைபாதை, பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி என காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடங்களில் மக்கள் குளித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் மீன் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
படவிளக்கம்
1. ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்.
2. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.