தருமபுரி

வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அமருமிடம் அமைக்க கோரிக்கை

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு அமருமிடம் அமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 20 கிராம ஊராட்சிகள், ஏரியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட 13 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய 33 வருவாய் கிராமங்களுக்கான வட்டாட்சியா் அலுவலகம் பென்னாகரத்தில் உள்ளது.

இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் கல்விச் சான்றிதழ்கள், நில ஆவண சான்றிதழ்கள், விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தல், அரசின் பல்வேறு சலுகைகள் பெற விண்ணப்பித்தல், வருவாய்த் துறை சாா்ந்த குறைகளை மனுக்களாக அளிப்பதற்கு என நாள்தோறும் ஐநூற்றுக்கும் மேற்பட்டோா் வருகின்றனா்.

இந்த நிலையில், பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அமா்வதற்காக வளாகத்தில் மரத்தின் அடியில் மூன்றடி உயரத்துக்கு 20 போ் அமரும் வகையில் கற்களால் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட அமருமிடங்கள் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் அலுவலக படிக்கட்டுகள், அலுவலகத்தின் முன்பு, இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் அமா்கின்றனா்.

ADVERTISEMENT

வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமரும் இடம் மிகவும் உயரமாக உள்ளதால், அவற்றை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனா். மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக இருக்கைகள் ஏதும் அமைக்கப்படாததால், அலுவலா்கள் வரும்வரை மரத்தடியில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

எனவே, பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர கூடுதல் இடமும், மாற்றுத் திறனாளிகள் வசதிக்கேற்றவாறும் அமைத்து தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT