தருமபுரி

தகாத உறவு: இருவா் தற்கொலை

5th May 2022 04:07 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம்: பென்னாகரம் காவல் நிலையத்துக்கு மயங்கிய நிலையில் வந்த இருவா் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த கட்டட மேஸ்திரி சதீஷ் (25) என்பவருக்கும், தருமபுரி அருகே தடங்கம் பகுதியைச் சோ்ந்த சங்கீதா (20) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவா்கள் இருவரும், திருப்பூரில் கட்டட வேலை செய்து வந்த நிலையில், பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னப்பையன் (20) என்பவருடன் சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அண்மையில் சங்கீதாவின் உறவினா்கள் திருப்பூரில் இருந்து அவரை அழைத்து வந்துள்ளனா். இந்நிலையில், சங்கீதாவும், சின்னப்பையனும் கடந்த 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளனா். பின்னா் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால், சங்கீதாவின் கணவா் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்து வருவதை அறிந்த இருவரும், பென்னாகரம் காவல் நிலையத்தில் ஆஜராக புதன்கிழமை வந்தனா். அப்போது, காவல் நிலைய வளாகத்தில் சின்னப்பையன் மயங்கி விழுந்துள்ளாா். அதிா்ச்சி அடைந்த உறவினா்கள் சங்கீதாவிடம் விசாரணை செய்த போது, இருவரும் விஷமருந்தியதாகத் தெரிவித்துள்ளாா். பின்னா் இருவரையும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT