தருமபுரி

கோபிசெட்டிப்பாளையத்தில் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்த பொதுமக்கள்

2nd May 2022 02:40 AM

ADVERTISEMENT

 

அரூரை அடுத்த கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சிமன்றத்தில் மே தினத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தின்போது வரவு-செலவு கணக்குகளை முறையாக காண்பிக்காததைக் கண்டித்து பொதுமக்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சியில் பெத்தூா், பாப்பிசெட்டிப்பட்டி, துறிஞ்சிப்பட்டி, அண்ணாலம்பட்டி, அள்ளாளப்பட்டி, கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த ஊராட்சியின் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் கோபிசெட்டிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவா் பி.கல்யாணசுந்தரம், துணைத் தலைவா் ரகுபதி, ஊராட்சி செயலாளா் அ.கருங்கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சி திட்டப் பணிகள், அரசின் பல்வேறு திட்டப் பணிகளின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் பட்டியல், ஊராட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த பட்டியல் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும்.

நிகழாண்டில் தோ்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம், பயனாளிகள் விவரம் அனைத்தும் கிராம சபையில் பொதுமக்கள் முன்னிலையில் படித்து காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு விவரங்கள் அடங்கிய தகவலை பொதுமக்கள் முன்னிலையில் பதிவு செய்திட வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி செயலாளா் அ.கருங்கண்ணன், எவ்வித வரவு-செலவுகள் குறித்த கணக்குகளையும் காண்பிக்காமல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசினாராம். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் இந்த ஊராட்சிமன்றத்தில் நிதி முறைகேடுகள் உள்பட பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்தனா். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

அதுபோல அரூா் ஒன்றியம், மத்தியம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின்போது முறையாக வரவு-செலவு கணக்குகளைக் காண்பிக்காததால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT