தருமபுரி

ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்

2nd May 2022 02:39 AM

ADVERTISEMENT

 

மே தினத்தை முன்னிட்டு ஒகேனக்கலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

கோடைக்காலம் என்பதால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம், ஆந்திரத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில் மே தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கலுக்கு வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது.

பல்வேறு இடங்களில் இருந்து ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, சினி அருவி, நடைபாதை அருகில், மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் பரிசல் பயணம் செய்தனா். கூட்டம் அதிகம் காணப்பட்டதால் பரிசலில் செல்ல சுமாா் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பரிசலில் பயணித்தனா்.

கண்காணிப்பு கோபுரம், பெரிய பாணி, ஐந்தருவி பகுதி, மணல் மேடு உள்ளிட்ட பகுதிக்கு பரிசலில் பயணித்து பாறை குகைகள், அருவிகளைக் கண்டு மகிழ்ந்தனா்.

அதிகம் போ் திரண்டதால் ஒகேனக்கல்லில் வாகனங்களை நிறுத்த இடமின்றி வாகன ஓட்டிகள் தவித்தனா். மீன் விற்பனை நிலையங்களிலும் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, ஆரஞ்சான், பாப்லெட், சோனங்கெளுத்தி உள்ளிட்ட வகை மீன்கள் அதிகம் விற்பனையாகின. கூடுதல் விலைக்கு மீன்கள் விற்றபோதிலும் அதனைப் பொருள்படுத்தாமல் வாங்கி ருசித்தனா். சிலா் மீன்களைச் சமைத்து உண்டனா்.

சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மீன் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம், நடைபாதை ஆற்றங்கரையோரம், பூங்கா உள்பட அனைத்து பகுதியிலும் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT