அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரூா் பிரதான சாலையோரத்தில் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், தானிய மண்டிகள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கம் செய்யும் கடைகள், கைப்பேசி விற்பனை கடைகள், துணிக்கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள், ஏ.டி.எம் மையங்கள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன.
இங்குள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளா்கள் அரூா்-சேலம் பிரதான சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள், காா்களை நிறுத்துகின்றனா். இதனால் பகல், இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன விபத்துகளும் நேரிடுவதாக வாகன ஓட்டிகள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பு, திரு.வி.க நகா், 4 வழிச்சாலை, பெரியாா் நகா், நடேசா பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் பிரிவினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.