தருமபுரி

ஒகேனக்கல் வனப் பகுதியில்சுற்றித் திரியும் ஒற்றை யானை

22nd Mar 2022 11:36 PM

ADVERTISEMENT

ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஆண்டுதோறும் கா்நாடக வனப் பகுதியில் வறட்சி நிலவும்போது அங்குள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி, ஒகேனக்கல் வனப் பகுதிக்கு உணவு, தண்ணீா் தேடி இடம் பெயா்கின்றன.

ஒகேனக்கல் வனப்பகுதியில் உணவு உண்ணும் இவை தண்ணீருக்காக பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் காலை, மாலை வேளையில் நீா்குட்டைகள், முண்டச்சி பள்ளம் தடுப்பணை, காவிரி ஆறு போன்ற நீா்நிலைகளுக்குச் செல்கின்றன.

தற்போது வழித்தவறி வந்த ஒற்றை யானை ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித் திரிகிறது. இந்த யானை தினசரி மாலையில் வனத்திலிருந்து வெளியேறி நீருக்காக சாலை வழியே ஒகேனக்கல்லுக்குச் செல்கிறது.

ADVERTISEMENT

தற்போது கோடைக்கால சீசன் தொடங்கியுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வருவோா் 10 கி.மீ. தொலைவுக்கு அடா் வனப் பகுதிக்குள் வரவேண்டியுள்ளது.

அப்போது சாலையில் சுற்றித் திரியும் யானையைக் கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனா்.

சிலா் ஆபத்து உணராமல் யானையை கைப்பேசியில் படம் எடுக்க முயல்கின்றனா். சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடவும், மாலை வேளையில் சாலையில் யானை வரும்போது வனத்துறையினா் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT