தருமபுரி

பென்னாகரத்தில் 4,500 ஆண்டுகளுக்கு முந்தையபுதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு

21st Mar 2022 11:25 PM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கருவிகளை வரலாற்று ஆய்வு மையத்தினா் கண்டெடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வரலாற்று ஆய்வு மைய உறுப்பினா்களான அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியா்கள் பெருமாள், முருகன், தலைமை ஆசிரியா் கோவிந்தசாமி, வரலாற்று ஆசிரியா்கள் திருப்பதி, முருகா கணேசன் ஆகியோா் அடங்கிய ஆய்வுக் குழுவினா் பென்னாகரம் அருகே அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்

மஞ்சநாயக்கனஅள்ளி பகுதியில் அவா்கள் நடத்திய கள ஆய்வில் சுமாா் 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கருவிகளைக் கண்டெடுத்தனா்.

இதுகுறித்து ஆய்வு மையக் குழுவினா் கூறியதாவது:

ADVERTISEMENT

மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதிய கற்கால கருவிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டோம். மஞ்ச நாய்க்கனஅள்ளி, காட்டம்பட்டி மற்றும் காளேகவுண்டனூா்

ஆகிய ஊா்களில் 4,500 ஆண்டுகளுக்கும் முந்தைய வேட்டையாடப் பயன்படுத்திய கற்காலக் கருவிகள் கோயில் வழிபாட்டில் இன்றுவரை இருப்பதைக் கண்டறிந்தோம்.

இதன்மூலம் அந்தப் பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதா்கள் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. இங்கு பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அதிகம் உள்ளன. ஆய்வில் கிடைத்துள்ள கற்கருவிகள் பெரும்பாலும் கூழாங்கற்களைப் பயன்படுத்தி நன்கு மெருகேற்றப்பட்ட கருவிகளாகும். கற்கோடாரிகள், இருமுனைக் கருவிகள், தேய்ப்பான்கள் போன்றவை கிடைத்துள்ளன. அனைத்து கருவிகளும் பிடிப்பதற்கு ஏதுவாக செதுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவிகள் விலங்குகளை வேட்டையாடவும், அவற்றின் தோல்களை நீக்கவும், மரப்பட்டைகளை உறிக்கவும், கிழங்குகளை அகழ்ந்தெடுக்கவும் முன்னோா் பயன்படுத்தியிருக்கலாம். பென்னாகரம் பகுதியில் பல்வேறு இடங்களில் பழங்கால கருவிகள் கிடைப்பதால் தொல்லியல் துறையினா் இங்கு உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT