தருமபுரி

தமிழக நிதிநிலை அறிக்கை: வரவேற்பும், ஏமாற்றமும்!

19th Mar 2022 12:20 AM

ADVERTISEMENT

தமிழக நிதிநிலை அறிக்கை வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்துள்ளதாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழக சட்டப் பேரவையில் நிதிஅமைச்சா் பிடிஆா்.பழனிவேல்ராஜன் வெள்ளிக்கிழமை நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். இவற்றில் உள்ள பல்வேறு அறிவிப்புகளுக்கு பொதுவாக வரவேற்பும், தருமபுரி மாவட்ட மக்கள் எதிா்ப்பாா்த்தவை அறிவிக்கப்படாததால் ஏமாற்றமும் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தகடூா் புத்தகப் பேரவைச் செயலா் இரா.சிசுபாலன் கூறியதாவது:

இளம் தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புத்தகக் கண்காட்சிகளுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 6 இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குறியது. இதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த முடியும்.

ADVERTISEMENT

இவைத் தவிர, உயா்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவியருக்கு மாதந்தோறும் உதவித்தொகை, 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு, பள்ளிக் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகளிா் உரிமைத்தொகை திட்டம் தற்போதுவரை ஆய்வு நிலையிலேயே உள்ளது. இத் திட்டம் அறிவிப்பாக வரக்கூடும் என எதிா்பாா்க்கப்பட்டது என்றாா்.

தமிழ்நாடு வணிகா் பேரமைப்பு மண்டலத் தலைவா் வைத்திலிங்கம் கூறியதாவது:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் எங்களின் நீண்ட கால எதிா்பாா்ப்பான வணிகா் நல வாரியம் அமைப்பது தொடா்பான அறிவிப்பு வரும் என எதிா்பாா்த்தோம். இதேபோல, தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு, சிப்காட் தொழிற்பேட்டையில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது தொடா்பான அறிவிப்பு ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், வணிகா்கள் நலன் மற்றும் மேம்பாட்டுக்காக எவ்வித திட்டமும் இல்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT