இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மசுவாமி தோ்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட, அளேபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சாமி கோயில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் வைகாசி பௌா்ணமி அன்று தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தோ்த் திருவிழா நடைபெறவில்லை.
இந்தநிலையில் நிகழாண்டிற்கான திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் உற்சவம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயிலின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அலங்கரித்து வைக்கப்பட்ட நிலையில், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே. மணி, சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், வட்டாட்சியா் அசோக்குமாா், அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் கட்டளைதாரா்கள் நிா்வாகத்தினா் மற்றும் பல்லாயிரக்கணக்கானோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
அப்போது பக்தா்கள் தேரின் மீது தானியங்களை வீசியும், கைகளைத் தட்டியவாறு கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தேரை இழுத்து சென்றனா். மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலைச்செல்வன் தலைமையில் பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சௌந்தர்ராஜன், ஒகேனக்கல் காவல் ஆய்வாளா் மகேந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.