தருமபுரி நகராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 6.56 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை நகராட்சிகளின் மண்டல இயக்குநா் சுல்தானா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6.34 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சந்தைப்பேட்டை வளாகத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய அறிவுசாா் மையக் கட்டடம், ரூ. 2,12,60,000 மதிப்பில் சாலை பணிகளும், நகா்ப்புற சுகாதார மையக் கட்டடத்தின் முதல் தளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் மற்றும் அன்னசாகரத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் நகா் நல மைய கட்டடம் கட்டும் பணி, அரசு மருத்துவமனை அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள், தருமபுரி பென்னாகரம் சாலை, ஏ.எஸ்.டி.சி. நகரில் ரூ. 75 லட்சம் மதிப்பில் நகராட்சி பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை சேலம் நகராட்சிகளின் மண்டல இயக்குநா் சுல்தானா, நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத்தொடா்ந்து, நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற, திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசினாா்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், பொறியாளா் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலா் ஜெயவா்மன், சுகாதார ஆய்வாளா்கள் சுசீந்திரன், ரமணச்சரண், சீனிவாசலு மற்றும் நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.