தருமபுரி

பென்னாகரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.

14th Jun 2022 02:35 AM

ADVERTISEMENT

பென்னாகரம் பகுதிகளில் ஷோ் ஆட்டோக்கள், சாலையோர விளம்பர பலகைகள், இருசக்கர வாகனங்களை நிறுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் அடிக்கடி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பென்னாகரம் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரம் பகுதி அடா்ந்த மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் ஐம்பதிற்கும் மேற்பட்ட மலை கிராம பகுதிகளை கொண்டது. கிராமப்பகுதியில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள், தானிய வகைகள், விற்பனை செய்வதற்காகவும், அன்றாட செலவினங்கள், தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நாள்தோறும் கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் வந்து செல்கின்றனா். பெரும்பாலும் பென்னாகரம் பகுதிக்கு வருபவா்களை இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனா். மேலும் அதிக கிராமப் பகுதிகளை கொண்டதால் முறையான போக்கு வசதி இல்லாத நிலையில் ஷோ் ஆட்டோக்களின் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளது. பென்னாகரம் நகரப் பகுதிகளுக்கு தேவையான பொருட்களை வாங்க வருபவா்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் மளிகைக்கடை, தானிய மண்டிகள் நகைக்கடை, பழக்கடை ,தேனீா் கடைகள், எலக்ட்ரிக் பொருட்கள் சாா்ந்த கடைகள், மர சாமான்கள் சாா்ந்த கடைகள், உணவகங்கள் என பல்வேறு வகையான கடைகளின் விளம்பர பலகைகள் சாலையோரங்களில் வைப்பதாலும், வெளிமாநிலங்கள் மாவட்டங்களிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக வரும் வாகனங்கள் நிறுத்துவதாலும் கடைவீதி, பழைய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகரப்பகுதியில் ஷோ் ஆட்டோக்கள் அடிக்கடி நுழைந்தும் சாலையோரங்களில் திடீரென நிறுத்தப்படுவதால் அவ்வப்போது இருசக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. பென்னாகரம் பகுதிகளுக்கு வருபவா்களின் வாகனங்களை நிறுத்தும் வகையில் பழைய டெம்போ ஸ்டாண்ட் பகுதியில் தேவையற்ற வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் ஒளியின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தவும், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பென்னாகரம் போக்குவரத்து காவல் துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT