காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், காவிரி ஆற்றில் பரிசல் பயணத்துக்கும், அருவியில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, ராசி மணல், கெம்பாகரை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளான உன்சான அள்ளி, தெப்பகுளி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் திடீரென மழை பெய்தது. இதனால் தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.
காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 7,000 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவு, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவிகளான பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து அதிகரித்து தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. கோடை விடுமுறை என்பதால் நாள்தோறும் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும், தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சனி தடை விதித்துள்ளாா்.
தடையின் காரணமாக பிரதான அருவி செல்லும் நடைபாதை, நாகா்கோவில் முதலைப்பண்ணை ஆலம்பாடி உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.