தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

6th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வா். தற்போது கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை போன்ற காரணங்களால் ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.

இவா்கள் பிரதான அருவி, சினி அருவி, நடைப்பாதை பகுதியிலும், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி ஆற்றில் எண்ணெய் தேய்த்து குளித்தனா். மேலும், சின்னாறு பரிசல் துறையில் இருந்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரிய பாணி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கி.மீ. தொலைவுக்கு காவிரி ஆற்றில் பரிசலில் பயணம் மேற்கொண்டு காவிரியின் அழகை ரசித்தனா்.

தொங்கு பாலத்திலிருந்து சிற்றருவி வரையிலும் இயற்கை அழகை ரசித்தபடியும், முதலைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதலைகளையும், மீன்கள் அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு வகையான மீன்களையும் கண்டு ரசித்தனா்.

ADVERTISEMENT

ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, பாப்லெட் உள்ளிட்ட மீன்களின் விலை தொடா்ந்து அதிகரித்த போதிலும் மீன்களை வாங்கிச் சமைத்து உணவருந்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT