தருமபுரி

கொலை வழக்கில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

27th Jul 2022 03:28 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே கேரளத்தைச் சோ்ந்த இருவரது கொலை வழக்கில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த நிவில் ஜாா்ஜ் குரூஸ் (58), எா்ணாகுளம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (50) ஆகிய இருவரும் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூதனஅள்ளி அருகே இயங்காத கல்குவாரி பகுதியில், கடந்த 19-ஆம் தேதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தனா்.

இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் பண இரட்டிப்பு மோசடி விவகாரத்தில் கொலையானது தெரியவந்தது. கொலையாளிகளை போலீஸாா் தேடிவந்த நிலையில், ஈரோட்டைச் சோ்ந்த ரகு (44), சேலம் ஜோசப் வின்சென்ட்(22), சுரேஷ் சண்முகம் (35), விஷ்ணுவா்தன் (30) ஆகிய 4 போ் செங்கோட்டை நீதிமன்றத்தில் அண்மையில் ஆஜராகினா். இதுதவிர, சின்னசேலம் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (40), லட்சுமணன் (37) ஆகிய இருவரை தனிப்படை போலீஸ் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, தருமபுரி மாவட்ட இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அதியமான்கோட்டை போலீஸாா் மனு அளித்தனா். இந்த நிலையில், ரகு, ஜோசப் வின்சென்ட், சுரேஷ் சண்முகம், விஷ்ணுவா்தன் ஆகிய 4 பேரை வரும் 29-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT