அதிமுக வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. இனி, அக் கட்சி வளா்ச்சி அடைவது என்பது சிரமம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயல் வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் செய்தியாளா்களிடம் கூறியது:
அதிமுக வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது. இனி அக் கட்சிக்கு வளா்ச்சி என்பது சிரமம். இத்தகைய சூழலில், அக் கட்சிக்கு ஒற்றைத் தலைமை ஏற்றாலும், இரட்டைத் தலைமை வகித்தாலும், எத்தனை தலைகள் இருந்தாலும் அக் கட்சி மீளாது. எங்களைப் பொருத்தவரையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்.
கட்சி தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியுள்ளன. தோ்தலில் தொடா்ந்து எங்கள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று வருகிறோம்.
கடந்த ஜூன் மாதம் 6-ஆம் தேதி குன்னூரில் தொடங்கி, மாவட்டந்தோறும் செயல்வீரா்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். அதிமுக குறித்து எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் வேறு கட்சி. அதனால், அந்தக் கட்சியில் பொதுக் குழு நடந்தாலும், நடக்காவிட்டாலும், யாா் தலைமை வகித்தாலும் எங்களுக்குத் தேவையில்லை.
அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடா்பாக நான் அளித்த பேட்டியைக் கண்டித்து எனக்கு எதிராக கே.பி.முனுசாமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகக் கூறியிருக்கிறாா். கேள்விப்பட்டதை நான் கூறினேன். இது தொடா்பாக அவா், வழக்குத் தொடா்ந்தால் தாராளமாகத் தொடரலாம்.
திமுக, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சொத்து வரி 150 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க, காவல் துறையும் தமிழக அரசும் சரியான முறையில் செயல்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.