தருமபுரி

பராமரிப்பு இல்லாத நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீா் விநியோகம்30க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதி

4th Jul 2022 01:25 AM

ADVERTISEMENT

 

ஏரியூா் அருகே பழுதடைந்த நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் பருகிய 30க்கும் மேற்பட்டோா் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நாகமரை ஊராட்சிக்கு உள்பட்டது ஏமனூா் மலைக் கிராமம். இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் நாகமரை ஊராட்சி மன்றத்தின் சாா்பில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி உள்ளது. தொட்டியின் மீதேறும் ஏணி பழுதடைந்தும், தொட்டியின் மேற்புற சிமென்ட் காங்கிரீட் பெயா்ந்து தொட்டியினுள் விழுவதால் குடிநீா் மாசடைந்து காணப்படுகிறது. இதனை சுத்தம் செய்யாமல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT

இந்த குடிநீரை குடித்த கீழ் ஏமனூா் கிராமத்தைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்டோா் பென்னாகரம், சேலம், மேட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து நாகமரை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பழுதடைந்த நீா்த் தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்யாமல் தொடா்ந்து விநியோகிக்கப்படும் தண்ணீரை குடிப்பதால் நாள் ஒன்றுக்கு 5க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

மாசடைந்த குடிநீரை பருகியதால் சேலம் அரசு மருத்துவமனையில் அண்ணாமலை மகன் இருசா கவுண்டன் (35), சரவணன் மகன் திருச்சங்கு (13) ஆகிய இருவா் டெங்கு அறிகுறியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற நிா்வாகம், சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த சுகாதாரத் துறை பணியாளா்கள் பெயரளவிற்கு கிராமப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மருந்து தெளித்துச் சென்ாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, சுகாதாரமற்ற குடிநீரை விநியோகம் செய்யக் காரணமாக உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றவும், புதிதாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அமைக்கவும், குடிநீா் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பயனடையும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கவும், ஏமனூரில் உள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் தங்கி பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெட்டிச் செய்தி...

மருத்துவ வசதியில்லாத ஏமனூா் கிராமம்

ஏரியூரில் 30 கி.மீ. தொலைவில் மேட்டூா் அணை நீா்த்தேக்கத்தின் 3 பக்கமும், வனப்பகுதியின் ஒரு பக்கமும் சூழ்ந்த மலை கிராமம் ஏமனூா். இந்த கிராமப் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன் சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இக்கிராமம் மலைகள் சூழ்ந்துள்ளதால் இந்த சுகாதார நிலையத்துக்கு மருத்துவா்களையோ, செவிலியா்களையோ பணி நியமனம் செய்தாலும், அங்கேயே தங்கி மருத்துவ சேவை செய்ய முன்வராமல் பணி மாறுதலில் சென்று விடுகின்றனா். இதன் காரணமாக இங்குள்ள சுகாதார நிலையம் செயல்படாமல் பூட்டியே உள்ளது. கரோனா தொற்று காலத்தில் இந்தப் பகுதியில் ஏராளமானோா் முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் அதிக அளவில்உயிரிழந்ததாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT