தருமபுரி

பென்னாகரம் வனப்பகுதியில் யானை சாவு

3rd Jul 2022 02:06 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பேவனூா் காப்புக்காடு, ஒகேனக்கல் கனவாய் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீா்த் திட்ட வடிகால் வாரியம் அருகே ஆஞ்சனேய ஓடைப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பென்னாகரம் வனச்சரக அலுவலா் முருகன் தலைமையிலான வனத் துறையினா் நிகழ்விடத்திற்கு சென்றனா். தருமபுரி மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பால நாயுடு உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவா் பிரகாஷ், வனக் குழுவினா் இறந்த யானையை பிரேதப் பரிசோதனை செய்து வனப் பகுதியில் புதைத்தனா்.

ADVERTISEMENT

யானையின் இறப்பு குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது 42 வயது மதிக்கத்தக்க மக்னா யானை உயிரிழந்து கிடந்தது. அந்த யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும், யானை இறந்தது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் முனியப்பன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT