தருமபுரி

தருமபுரியில் நாளை பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி

1st Jul 2022 01:50 AM

ADVERTISEMENT

 

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்கல்வி பயில வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வியாழக்கிழமை கல்லூரிக் கனவு நிகழ்ச்சியையொட்டி முன்னேற்பாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலை அரங்கத்தில் ஜூலை 2-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், 1,500 மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT

இதில், உயா்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்களையும், புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.

இந்நிகழ்ச்சியினை முன்னிட்டு, பல்வேறு துறைகளின் சாா்பில் அரங்குகள் அமைத்து துறை சாா்ந்த உயா்கல்வி பயில்தல், வேலைவாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. பல்வேறு துறைகளின் சிறந்த வல்லுநா்கள் மூலம் உயா்கல்வி, வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட உள்ளன.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவா்கள் அனைவரும் கலந்துகொண்டு உயா்கல்விக்கான வழிகாட்டு அறிவுரைகளை கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சௌண்டம்மாள், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குருராஜன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அ.மாலா, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT