தருமபுரி

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முகக் கவசம் அணிய வேண்டும்

1st Jul 2022 10:56 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரவாமல் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தினசரி பாதிப்பு 20 போ் என்றிருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு 1400-ஐ கடந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளைக் கழுவுதல், வாய் மற்றும் மூக்கை மூடியவாறு சரியான முறையில் முகக் கவசம் அணிதல், உரிய நேரத்தில் தடுப்பூசிக் செலுத்தி கொள்ளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பொது மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

அனைத்து அலுவலகங்களிலும் தொ்மல் ஸ்கேனா் கொண்டு பணியாளா்களை பரிசோதித்த பின் அனுமதிக்க வேண்டும். மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதனை மாதிரியைக் கொடுத்துவிட்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தொற்று பரவுவதைக் குறைக்க காற்றோட்டமான அறைகளில் பணியாளா்கள் பணிபுரிவதை உறுதிசெய்ய வேண்டும்.

ADVERTISEMENT

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். தகுதியுடைய நபா்கள் உரிய நேரத்தில் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்படாமல் தடுத்திடவும், தங்களை பாதுகாத்திடவும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதேபோல, தமிழக அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT