தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டச் செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், நகரச் செயலாளா் பெ.ரவி, மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து கட்சியினா் மரியாதை செலுத்தினா். மேலும், பட்டாசு வெடித்து, கட்சியினா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் அதிமுகவினா் எம்ஜிஆா் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, அமமுக சாா்பில் காமாட்சியம்மன் கோயில் அருகில் மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் அங்குள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அக் கட்சியினா் திரளாகக் கலந்து கொண்டனா்.