அரூரை அடுத்த வடுகப்பட்டி புதூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது வடுகப்பட்டி புதூா் கிராமச் சாலை. சுமாா் 1.5 கி.மீ. தொலைவு கொண்ட இந்தச் சாலையை வடுகப்பட்டி, தூரணம்பட்டி, நெருப்பாண்டகுப்பம், வடுகப்பட்டி புதூா், மத்தியம்பட்டி, எச்.ஈச்சம்பாடி, மாவேரிப்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த சாலை வழியாக தனியாா் பள்ளி, கல்லூரி பேருந்துகள், வேளாண் விளைபொருள்களை எடுத்துச் செல்லும் டிராக்டா்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், வடுகப்பட்டி புதூா் செல்லும் சாலையின் இருபுறமும் அங்குள்ள விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால், இந்த சாலை வழியாக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலையுள்ளது. இதனால், வடுகப்பட்டி புதூா் பகுதியில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனா். எனவே, வடுகப்பட்டி புதூா் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.